14 March, 2011

ஃபுகுஷிமா 3வது அணு உலை வெடித்தது!


ஜப்பான் கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் செயலிழந்த ஃபுகுஷிமா மாகாணத்திலுள்ள டாய்ச்சி அணு மின் நிலையத்தின் 3வது அணு உலை வெடித்து, அதிலிருந்தும் அணுக் கதிர் வீச்சு பரவி வருகிறது.

டாய்ச்சி அணு மின் நிலையத்தின் 3வது அணு உலை வெடிப்பை தாங்கள் கட்டுப்படுத்தி விட்டதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது. இந்த அணு உலையில் இருந்த ஹைட்ரஜன் வாயு அதிகரித்ததால் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அணு உலையின் மையப் பகுதியை தாங்கியுள்ள வெளிச்சுவர் வெடிப்பை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் ஜப்பான் அணு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

3வது அணு உலை வெடித்து அதிலிருந்து புகை மண்டலம் எழும்பியது ஜப்பான் அரசு தொலைக்காட்சி காண்பித்தது. அணு உலையில் யுரேனியம் எரிபொருள் ஏற்றப்பட்டிருக்கும் நடுப்பகுதி (core) பாதிக்கப்படவில்லை என்றும், அணுக் கதிர் வீச்சு கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூகம்பத்தினால் தாக்கப்பட்டதால் அணு உலைகள் செயலிழந்ததை மட்டுமின்றி, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டாய்ச்சி அணு மின் நிலையத்தில் உள்ள குளிரூட்டிகள் செயலிழந்தன. அவைகளை செயல்பட வைக்க நடந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடல் நீரைக் கொண்டு அணு உலைகளில் அதிகரித்துவரும் வெப்பத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.

ஆனால் கடல் நீரைக் கொண்டு அணு உலையின் வெப்பத்தை தணிக்கும் முயற்சி சரியானதல்ல என்று அணு சக்தி நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். டாய்ச்சி அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தை ஒத்தது என்றும், இதனை கட்டுப்படுத்துவது சாதாரண விடயமல்ல என்றும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், டாய்ச்சியில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகள், செர்னோபில் அணு உலையை விட அதிக பாதுகாப்பாக வடிவமைகப்பட்டவை என்பதால், அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

அணு கதிர் வீச்சால் இதுவரை 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் ஜப்பான் அரசு கூறியுள்ளது.

No comments:

Cincopa Gallery

WordPress plugin